சிகரெட் சாம்பல் பட்டதில் இளைஞர்களிடையே தகராறு - விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்
சிகரெட் சாம்பல் பட்டதில் தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் குடல் வெளியே வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலக காலனி ஒத்தவாடை தெருவில் உள்ள ஒயின் ஷாப்பில் சென்னை வரதம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார் (35), பேரக்ஸ் சாலை பகுதி சேர்ந்த கார்த்திக்(29) ஆகிய இருவர் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அருகில் மது குடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்து கொண்டிருந்துள்ளார். அவரது சிகரெட் சாம்பல் அருகாமை டேபிளில் மது குடித்துக் கொண்டிருந்த குமார்மீது பட்டுள்ளது. இதனால் குமாரும் அவரது நண்பருமான கார்த்தியும் தள்ளிச்சென்று சிகரெட் பிடிக்குமாறு அந்த நபரிடம் கூறியுள்ளனர்.
மது போதையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த சிறிய ரக கத்தியை எடுத்து குமாரின் வலது புற வயிற்றில் குத்தியுள்ளார். இதில் குமாருக்கு வலது வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்துள்ளது. மேலும் அந்த நபர் குமாரின் நண்பரான கார்த்தியின் இடது கையிலும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கார்த்திக்கின் இடதுகை நரம்பு அறுபட்டது.
இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த குமார் மற்றும் கார்த்திகை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
கொலை முயற்சி வழக்கு, கொலைவழக்காக மாற்றப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கத்தியால் குத்தி குமாரை கொலைசெய்த ஓட்டேரி ஒத்தவாடை தெரு பகுதியைச் சேர்ந்த பியாஸ் (22) என்ற நபரை தலைமைச் செயலக காலனி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கொலை குற்றவாளி பியாஸிடம் தலைமைச் செயலக காலனி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.