மதுரை| நடுக்காட்டில் அழுகிக் கிடந்த உடல்.. குழந்தை பிறந்து சில நாட்களில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
மதுரை கள்ளிக்குடி தாலுகா உட்பட்ட திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் சாந்தி தம்பதியர். இவர்களின் 24 வயது மகன் திருமுருகன் என்ற சூர்யா. இவருக்கு இரண்டு திருமணம் ஆகி கவின் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும் பிரசாத் என்ற பிறந்து 20 நாளான இன்னொரு ஆண் குழந்தையும் உள்ளன.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் கருவேலங்காட்டுக்குள் ஒன்றாக மது அருந்தச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அடுத்தநாள் காலை வரை அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி தொடர்ச்சியாக அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
ஆனாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே பயந்துபோன அவர் வெள்ளிக்கிழமையன்று திருமுருகனைக் காணவில்லை என கூடக் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுப்பட்டி அருகே உள்ள ஒரு காட்டிற்குள் திருமுருகனின் இருசக்கர வாகனம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொலுத்தப்பட்ட நிலையில் இருந்தது கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் அப்பகுதியில் தேடியபோது அழுகிய நிலையில் திருமுருகனின் உடல் கிடந்துள்ளது.
உடனடியாக ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவியூர் காவல்துறையினர் உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்போது யார் கொலை செய்தார்கள் கொலைக்கான காரணம் என்ன ? இளைஞர் இறப்பில் உள்ள மர்மம் என்ன என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.