மதுரை: பிரசவத்தின்போது மருத்துவர்கள் அலர்ட்... குழந்தைத் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ
மதுரையில் 17 வயது சிறுமியை குழந்தைத் திருமணம் செய்த இளைஞர் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
மதுரை சோழவந்தான் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி - முனியம்மாள் தம்பதிக்கு 17 வயது நிரம்பிய மகள் உள்ளார். இந்நிலையில் மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞரான மதுரைவீரன் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறியும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியும் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கருவுற்றதை அறிந்த பெற்றோர் தனது மகளை 16 வயதிலேயே இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் 17 வயது சிறுமி பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதனைத்தொடர்ந்து சிறுமியின் மருத்துவ அறிக்கையில் சிறுமிக்கு 17 வயது எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மாவட்ட மகளிர் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது சிறுமிக்கு 16 வயதிலேயே திருமணம் செய்துகொடுத்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் மதுரைவீரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியையும், சிறுமியின் குழந்தையும் அரசு காப்பகத்திற்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.