சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் முடித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் முடித்த வாலிபரை போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே மொழையூரை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் சிவச்சந்திரன் (23). டிரைவராக வேலை செய்து வரும் இவர், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடத்திச் சென்றுவிட்டதாக பெற்றோர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து உடனடியாக போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிவச்சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து திருமணமும் முடித்ததாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார், சிவசந்திரன் மீது குழந்தைகள் திருமணதடைச்சட்டம், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.