வட்டியை கட்டாததால் இளம் தொழிலதிபர் வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணையில் அம்பலம்
கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டாத இளம் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்த நகர் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் லோகேஷ். இவரது வீட்டின் மேல் தளத்தில் ரகுராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் ரகுராமின் மனைவி வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு நேற்று ஓசூர் அண்ணைநகரை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் ரகுராமின் வீட்டின் முன்பு பாலாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேகத்திக்குரிய ரகுராமனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வட்டியை கட்டாததால் இளம் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி (30). இவர், ஓசூரில் தங்கி ராஜேஸ்வரி லே-அவுட்டில் சிறு, குறுந்தொழிற்சாலை நடத்தி வந்தார். தொழில் வளர்ச்சிக்காக இவர், கெலமங்கலம், கேசவப் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரகுராமன் (26) என்பவரிடம் 31 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக பாலாஜி நடத்தி வந்த தொழில் நிறுவனம் இயங்காததால், வட்டியை கொடுக்க முடியவில்லையாம். இதனால், ரகுராமன், பாலாஜி இடையே பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர் ஒசூர் வந்து, மாதம் ரூ. 5 லட்சம் வீதம் வட்டியுடன் பணத்தைக் கொடுத்து விடுவதாக ரகுராமனிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஜூன் 10-ஆம் தேதி பாலாஜியிடம், ரகுராமன் பணம் கேட்டுள்ளார். அப்போது ரகுராமன் வீட்டுக்கு வந்த பாலாஜி காசோலையை கொடுத்து அடுத்த வாரம் வங்கியில் எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஏற்கெனவே பாலாஜி கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய நிலையில், மீண்டும் அவர் காசோலை கொடுத்தது ரகுராமனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ரகுராமன் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்துவந்து பாலாஜியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது அம்பலமானது.