‘நீ தான்டா என் வாழ்க்கை’ - மாணவனைக் கடத்திய இளம்பெண் கைது!
அரூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவனை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். இவரது மகன், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் வேடகட்டமடுவு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தசரதனின் உறவினர் மகள் சுமதி (22) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சிக்களூரில் இருந்து வந்துள்ளார். நிகழ்ச்சிக்கு இடையே மாணவனுக்கும், சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நெருக்கமாக, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளனர். உறவினர் மகள் தானே என ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட தசரதன், இருவரின் போக்கும் சரியில்லை என்பதை அறிந்ததும், சுமதியை அழைத்து கண்டித்துள்ளார். தனது மகனை திட்டிக்கண்டித்துள்ளார்.
மாணவனுடன் அப்பெண் பேசுவதை குறைத்துக்கொண்டார். சில நாட்களுக்குப்பின் திடீரென இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவனை காணவில்லை. பதறிப்போன பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மாணவனை காணவில்லை என்பதால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்களும் தங்கள் தரப்பில் தகவலை பகிர்ந்து தேடினர். விசாரணையின் போது சுமதி குறித்து காவலர்களிடம் தசரதன் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், மாணவனை சுமதி பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றுள்ளது தெரியவந்தது. வீட்டில் இருந்த மாணவனை ‘நீ தான்டா என் வாழ்க்கை. நான் உன்ன பாத்துக்குறேன் வந்துடு. நீ இல்லாம இருக்க முடியாது’ என ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றது விசாரணையில் வெளிவந்தது.
இதையடுத்து தொலைபேசி மூலம் சுமதியை எச்சரித்த காவலர்கள் உடனே, ஊருக்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி மாணவரும், சுமதியும் ஊர் வந்துள்ளனர். கடத்தப்பட்ட மாணவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய காவலர்கள், பின்னர் அவரை சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பெண்ணை கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். தமிழகத்திலேயே பெண்ணின் மீது போக்சோ சட்டம் பாய்வது, இது இரண்டாவது முறையாகும்.
(தகவல்கள் : விவேகானந்தன், புதிய தலைமுறை செய்தியாளார், தருமபுரி)