நெல்லை: சாலை வளைவில் அரசுப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் - மருத்துவமனையில் அனுமதி
ராதாபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. இவர் கூலிவேலை செய்துவருகிறார். இவரது மகன்கள் வள்ளியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் தினமும் காலையில் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசுப் பேருந்தில் அழைத்துச்சென்று பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்புவார். இன்று காலை அதேபோல் மகன்களை அழைத்துக்கொண்டு சமூகரெங்கபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.
பேருந்து சமூகரெங்கபுரம் ஊருக்கு மேற்புறம் உள்ள வளைவில் செல்லும்போது பேருந்தில் இருந்த சுந்தரி முன்வாசல் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சுந்தரி மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தை நிகழ்ந்த அரசு பேருந்தை ராதாபுரம் போலீசார் தடுத்துநிறுத்தி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.