”திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்!

”திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்!
”திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுக நிர்வாகி மீது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் கவிதா. இவர் தனது குடும்ப வருமானத்திற்காக வீடு வீடாகச் சென்று அப்பளம் மற்றும் வெள்ளைப்பூண்டு விற்று அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் அதிமுக பேரூர் கழக துணைத்தலைவரும் தற்போது திமுக பிரமுகருமாக உள்ள அய்யனார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக கவிதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கவிதாவிற்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்காக தான் சொல்லும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும், அவர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்ததால் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனது அடியாட்களுடன் கவிதாவின் வீட்டிற்கே சென்று தான் சொல்லுவதை கட்டாயம் கேட்கவேண்டும் என மிரட்டல் விடுத்ததுடன் கவிதா மற்றும் அவர் தாயாரை தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த கவிதா மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கட்சி பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி தன்னை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் கவிதா.

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க இணங்க மறுத்த தன்னைத் தாக்கிய திமுக பிரமுகர் அய்யனார் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட்டார் கவிதா. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com