போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்ஐ

போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்ஐ
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்ஐ

அயனாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் கொண்ட மர்ம கும்பல், உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உதவி ஆய்வாளர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு கௌதம் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததுள்ளார் என்றும், இருசக்கர வாகனத்தின் பின்னால் சூர்யா என்ற பெண்டு சூர்யா மற்றும் அஜித் ஆகிய 3 பேரும் இருந்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதில் பின் இருந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், பதுங்கியிருந்த பெண்டு சூர்யாவை கைது செய்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்தபோது பெண்டு சூர்யா, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்டதை அடுத்து போலீசார் வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளனர். அப்போது பெண்டு சூர்யா அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதையடுத்து தலைமை காவலர் அமுனுதீன் மற்றும் காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் பெண்டு சூர்யாவை துரத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருந்த கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி விட்டு பெண்டு சூர்யா தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இந்த தாக்குதலில் தலைமை காவலர் அமானுதீன் மற்றும் காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காகவும் காவலர்களை பாதுகாக்கவும் உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெண்டு சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டு பிடித்துள்ளனர்.

இதையடுத்து பிடிபட்ட பெண்டு சூர்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள கரும்பு ஜூஸ் கடை அருகில் காவல் துறையின் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க சங்கிலி பறிப்பு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதில், பெரும்பாலான வழக்குகளில் போலீசாரை தாக்கி அவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com