பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க போராடிய பெண் - கண்பார்வை இழந்த பரிதாபம்!
புனேவில் உள்ள ஒரு கிராமத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தப்பிக்க முயன்றதில் ஒரு கண்பார்வை பறிபோயுள்ளது. மற்றொரு கண்ணும் பலத்த காயமடைந்துள்ளது.
புனே மாவட்டம் ஷிருர் தாலுக்காவில் 37 வயது பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்திருக்கிறார். வறுமை நிலையில் உள்ள அவரது குடும்பத்திற்கு உதவியாக கணவருடன் சேர்ந்து சிறுசிறு வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வந்திருக்கிறார். அவர் தனது வீட்டைத் திறந்து சிறுநீர் கழிக்க வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து தவறாக நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறார். அந்த நபரிடம் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பெண்ணின் கண்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இதுபற்றி தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் ஒரு கண்பார்வையை இழந்துவிட்டார் எனவும், மற்றொரு கண்ணிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்துவருவதாகவும் டி.எஸ்.பி ராகுல் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவருக்கு சுயநினைவு திரும்பியபின் குற்றவாளி பற்றி விசாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.