மதுரையில் காதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி காவல்துறை விசாரணையில் பிடிபட்டுள்ளார்.
மதுரையை அடுத்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவர், கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை செய்து வந்தார். இவரிடம் வாகன ஓட்டுநராக வேலை பார்க்கும் சரவணன் என்பவருக்கும், தென்னரசுவின் மனைவிக்கும் தவறான உறவு இருந்தாக கூறப்படுகிறது.
இதையறிந்த தென்னரசு, சரவணனை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி கணவர் உறங்கிய நேரத்தில் சரவணனை வரவழைத்த விஜயலட்சுமி, அவருடன் சேர்ந்து, தென்னரசுவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். ஆனால், குடிப்பழக்கம் இருந்த தனது கணவர், மஞ்சள்காமாலையால் இறந்துவிட்டதாக விஜயலட்சுமி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
(கொலைக்கு உடந்தையாக இருந்தவர்)
விஜயலட்சுமியின் அழுகையை நம்பி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பிரேதபரிசோதனையில் தென்னரசு தொண்டை எலும்பு உடைந்து கொல்லப்பட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதலருடன் சேர்ந்து கணவரை விஜயலட்சுமி கொன்றது அம்பலமானது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.