பெற்ற மகனை கூலிப்படையை வைத்துக் கொன்ற அம்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணுதேவி (46). இவர் மகன் மின்டு ராம் (25). மின்டுராமுக்கு அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மின்டு அக்கம் பக்கத்து பெண்களை அடிக்கடி கிண்டல் கேலி செய்வாராம். சிலருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். அவர் அம்மாவிடம், அந்தப் பெண்கள் புகார் சொல்வது வழக்கம். இதனால் மின்டுவுக்கும் அவர் அம்மாவுக்கும் தினமும் தகராறு நடக்கும். அதோடு அக்கம்பக்கத்தில் கடன் வாங்கும் மின்டு அதைத் திருப்பிக் கொடுப்பதும் இல்லை. இந்தப் பிரச்னையும் ரேணுவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ரேணுவையும் அடித்து துன்புறுத்துவாராம் மின்டு. என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதாக இல்லை. டார்ச்சர் தொடர்ந்துகொண்டு இருந்தது.
இதில் இருந்து தப்பிக்க மகனைக் கொன்று விட முடிவு செய்தார் ரேணு. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் சொன்னார். 50 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு கூலியாகப் பேசப்பட்டது. அதை வாங்கிய அவர்கள் துப்பாக்கியால் மின்டுவை சுட்டுக்கொன்று விட்டு, உடலை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தினமும் என் மாமியார்தான் அவருடன் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார் என்று போலீசிடம் சொன்னார் மின்டுவின் மனைவி அஞ்சு. இதையடுத்து ரேணுவிடம் சாதாரணமாக போலீசார் விசாரித்தனர். அவர் விசாரணையை திசைத் திருப்பும் விதமாக பொய் தகவலைத் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார் ரேணு. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெற்ற மகனை அம்மாவே கூலிப்படையை வைத்து கொன்றிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.