பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கேள்வி

பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கேள்வி
பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கேள்வி

ஒரு சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அரசு ஊழியரிடம், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு வினோதமான கேள்வியை கேட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய உறவின் முறை சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்தகைய கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுத்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது, இதனால் மேல்முறையீட்டுக்கு முன் குற்றம்சாட்டபட்டவருக்கு ஜாமீன் வழங்க செஷன்ஸ் நீதிமன்றத்தின் வழங்கிய உத்தரவு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மனுதாரரிடம் கருத்துகளை கேட்டார், "நீ அவளை திருமணம் செய்து கொள்வாயா?" இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல் பதிலளித்தார், "நான் வழிமுறைகளை எடுப்பேன்." "இளம்பெண்ணை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு நீங்கள் நினைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு அரசு ஊழியர் என்று உங்களுக்குத் தெரியும்" என்று தலைமை நீதிபதி போப்டே பதிலளித்தார். "நாங்கள் உங்களை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையெனில் நாங்கள் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள்" என்று நீதிபதி போப்டே தெரிவித்தார்.

இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்பட்டபோது, மனுதாரருக்கான ஆலோசகர், "நான் அப்போது திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், ஆனால் சிறுமி மறுத்துவிட்டாள், நான் இப்போது திருமணமாகிவிட்டதால் என்னால் முடியாது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை" என தெரிவித்தார். இதன்பின்னர் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மனுதாரரை கைது செய்வதிலிருந்து, அவருக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கியது. இதற்கிடையில், மனுதாரர் வழக்கமான ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்த வழக்கின் கொடூரமான உண்மைகள் என்னவென்றால், மனுதாரரான இந்த நபர், தனது தொலைதூர உறவினரான 16 வயது சிறுமியை பள்ளிக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்தார். ஒரு நாள், சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் ஊருக்கு வெளியே சென்றிருந்தபோது, அவர் வீட்டிற்குள் நுழைந்தார். அந்த சிறுமியின் வாயைப் பொத்திக் கொண்டு, அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவத்தை யாரிடமும் வெளிப்படுத்தினால் அவர் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும், அச்சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் மிரட்டினார். அதன்பின் இந்த அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி, ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்புவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.

ஒரு நாள், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றபோது, அவரது தாய்க்கு விவகாரம் தெரிந்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றார். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபரின் தாயார், சிறுமிக்கு 18 வயது அடைந்தவுடன் தனது மகன் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். மேலும் மனுதாரரின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்பறிவற்ற தாயிடம் தங்கள் குழந்தைகளுக்கு இடையே, ஒருமித்த கருத்துடனே பாலியல் உறவு இருந்தது என்று முத்திரைத் தாளில் கையெழுத்து பெற்றார். ஆனால் சிறுமி மேஜரான பின்னர் இந்த திருமணத்தை ஏற்க மனுதாரரின் தாய் மறுத்துவிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, மனுதாரர் மீது புகாரளித்தார், இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 417 (மோசடிக்கு தண்டனை), 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 4 வது பிரிவுகளின் கீழ் (ஊடுருவக்கூடிய பாலியல் தண்டனை) மற்றும் போஸ்கோ பிரிவின்கீழ் அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் மனுதாரர், முன் ஜாமீனுக்காக ஜல்கானின் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். 2020 ஜனவரி 6 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் முறையீடு செய்தார். குற்றங்கள் தீவிரமானவை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் ஒரு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று அந்நீதிமன்றம் தீர்ப்பளித்தளித்தது. அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்ட அந்த அரசு ஊழியர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com