காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்: ஜாமினில் வெளியே வந்த கணவர் மீது உறவினர் புகார்
திருப்பூரில் காதல் திருமணம் செய்த பெண் ஓராண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மரணத்திற்கு கணவர்தான் காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் கன்னையா - மணிமுத்து தம்பதியினர். திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தனது நான்கு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் வைஷ்ணவி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணமாகி போயம்பாளையத்தில் வைஷ்ணவி-அருண்குமார் தம்பதி வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அருண்குமார் தனது மனைவியை தனியாக வீடு எடுத்து தங்க வைப்பதாக கூறி பண்ணாரியம்மன் நகரில் கடந்த 4 நாட்களுக்கு முன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அருண்குமாரும் வைஷ்ணவியும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் அருண்குமார் மட்டும் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில், சாத்தப்பட்ட கதவு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வைஷ்ணவி நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிவிட்டதால் ஆர்டிஓ தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாகியுள்ள வைஷ்ணவியின் கணவர் அருண்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் வீரபாண்டி காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
வைஷ்ணவியை அவரது கணவர் அருண்குமார்தான் கொலை செய்திருப்பார், அவரை கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.