சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன் - அனிதா தம்பதி திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இருவர் கதிரவனை கடுமையாக தாக்கினர். பின்னர் அனிதாவிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காமிரா மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனிதாவிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மென்பொறியாளர் கதிரவனுக்கும், அனிதாவிற்கும் சில நாட்களுக்கு முன் திருமணமானது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்துவரும் அந்தோணி ஜெகன் என்பவரை அனிதா காதலித்து வந்துள்ளார். ஆனால், வலுக்கட்டாயமாக கதிரவனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் பிடிக்காமல் இருந்து வந்த அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் மூலம் கணவரைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். சதித்திட்டத்தின் படி, திருவான்மியூர் கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கதிரவனை அழைத்துச்சென்று, அவரது கண்களைக் கட்டிக் கொண்டு அனிதா விளையாடியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன், ஆயுதங்கள் மூலம் கதிரவனை கடுமையாக தாக்கினார். விசாரணையில் இவை அனைத்தும் தெரியவர, அனிதாவையும் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதுங்கியிருந்த அந்தோணி ஜெகனையும் காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பலத்த காயமடைந்த மென்பொறியாளர் கதிரவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கில் சிறையில் உள்ள அனிதா ஆண்டனி ஜெகன் மீது கொலை வழக்காக மாற்றம் செய்யப்படும் எனவும் திருவான்மியூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆண்டனி ஜெகனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “ஏற்கெனவே கதிரவன் அனிதா தேனிலவு சென்ற போது, மலையில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்றோம். அது தோல்வியில் முடிந்ததால் நேற்று கொலை செய்ய திட்டம் தீட்டினோம்” என்று தெரிவித்துள்ளார்.