இளைஞர் பூரிக்கட்டையால் அடித்து கொலை - மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் கணவர் விபரீதம்
கோவையில் மனைவியிடம் தகாத உறவு கொண்டிருந்தவரை பூரிக் கட்டையால் தாக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை சிட்கோ நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது வீட்டின் அருகே திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இசக்கிலிங்கம் (21) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியிலுள்ள முத்து விலாஸ் என்ற பலகார கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் அபுபக்கரின் மனைவியும் பணி புரிந்து வந்துள்ளார். அவ்வப்போது மட்டும் பேசிக்கொண்டிருந்த இவர்களுக்கு மத்தியில் தகாத உறவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனை அபுபக்கர் பலமுறை எச்சரித்தும், இருவருமே அதனைக் கண்டு கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வழக்கம் போல் வீட்டிற்கு வந்த அபுபக்கர், இசக்கி அவரது வீட்டின் கட்டிலில் படுத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அபுபக்கர் வீட்டில் இருந்த பூரிகட்டையால் இசக்கிலிங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிலிங்கம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அபுபக்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.