மனைவி தற்கொலை! கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
பெரம்பலூரில் பெண் வருவாய் ஆய்வாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன், மாமியார் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் இளையராஜாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மகள் நிர்மலாவுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இளையராஜா நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், நிர்மலா பெரம்பலூரில் வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் திருமணமாகி 10 மாதங்களில் கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிர்மலாவை அவரது மாமியார் மற்றும் உறவினர் மலர் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இந்த தகராறில் மனமுடைந்த நிர்மலா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்த வழக்கை பெரம்பாலூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், கணவன், மாமியார் மற்றும் உறவினர் மலர் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அத்துடன் ரூ. 5 ஆயிரம் அபராதமும், அதை செலுத்தத் தவறினால் மேலும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.