“தகுதி பெற்றும் வேலை கிடைக்கல” - ஆட்சியர் அலுவலகத்தில் கணவருக்காக தற்கொலைக்கு முயன்ற பெண்

“தகுதி பெற்றும் வேலை கிடைக்கல” - ஆட்சியர் அலுவலகத்தில் கணவருக்காக தற்கொலைக்கு முயன்ற பெண்
“தகுதி பெற்றும் வேலை கிடைக்கல” - ஆட்சியர் அலுவலகத்தில் கணவருக்காக தற்கொலைக்கு முயன்ற பெண்

காவலர் தேர்வில் தகுதி பெற்றும் வேலை கிடைக்காத கணவருக்கு காவலர் பணி கேட்டு, தருமபுரி ஆட்சியர் அலுவலக மாடியில் நின்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன்(33). இவர் கடந்த 2008 -2009 ஆண்டில் தமிழக இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வு எழுதியுள்ளார். அந்த தேர்வில் தேர்ச்சிபெற்று அனைத்து தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் சாதிரீதியான கட்ஆப் மதிப்பெண் வரும்பொழுது, அதில் வேடியப்பன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தனது மதிப்பெண் சான்றிதழ், தான் எழுதிய ஓஎம்ஆர் சீட் நகல் ஆகியவற்றைக் கேட்டு தமிழக காவல்துறை இயக்குநருக்கு மனு அனுப்பினார். ஆனால் அந்த மனுவிற்கு காவல் துறை சார்பில் எந்தவிதமா பதிலும் கொடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். ஆனால் பலன் கிடைக்காத காரணத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தான் 2007ஆம் ஆண்டு தேர்வு எழுதிய நகல் பெற்றிருக்கிறார்.

ஆனால் அந்த பதிலில், வேடியப்பன் பதிவெண்ணில், கார்த்திக் என்பவர் பெயர் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 2008- 2009ஆம் ஆண்டு வேடியப்பன் பதிவெண்ணில், கார்த்திக் என்பவர் முறைகேடாக பணியில் இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும், ஆகவே சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய டிஎஸ்பி ரெஜினாபேகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல் காவலர் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என முறையிட்டுள்ளனர். ஆனால் இதற்கு காவல்துறையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேடியப்பன், அவருடைய மனைவி மோகனா இருவரும் இன்று காலை 11 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். அப்பொழுது மோகனா திடீரென அலுவல மேல்மாடியில் ஏறி நின்று, தனது கணவருக்கு காவல்துறையில் வேலை வழங்கவேண்டும் என்றும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது தன்னை காப்பாற்ற யாராவது வந்தால், கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை கீழே இறக்கினர்.

அதனைத்தொடர்ந்து கணவன மனைவி இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் அலுவலக மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com