வீடியோ காலில் பாலியல் வலை; நிர்வாண வீடியோவை காட்டி குஜராத் அதிபரிடம் கோடிகளை கறந்த கும்பல்

வீடியோ காலில் பாலியல் வலை; நிர்வாண வீடியோவை காட்டி குஜராத் அதிபரிடம் கோடிகளை கறந்த கும்பல்
வீடியோ காலில் பாலியல் வலை; நிர்வாண வீடியோவை காட்டி குஜராத் அதிபரிடம் கோடிகளை கறந்த கும்பல்

பணத்தை சுருட்ட நினைத்துவிட்டால் சிறிய தொகையில் இருந்து கோடிக் கணக்கான அளவுக்கு எப்படியெல்லாம் ஆட்டையப்போடலாம் என்பதற்காக நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும் மோசடி பேர்வழிகள் கையில் எடுக்கும் பல செயல்கள் போலீசாரையே திக்குமுக்காட வைத்துவிடும். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களே போலீசை அணுக முடியாதபடியான சம்பவங்களை செய்துவிட்டு போய்விடுவார்கள்.

அப்படியான அதிர வைக்கும் சம்பவம் ஒன்று குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 68 வயதான தொழிலதிபருக்கு நடந்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, தவறுதலாக கால் செய்த பெண்ணின் வற்புறுத்தலால் வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய அந்த தொழிலதிபரிடம் இருந்து பல கோடிகளை கறந்திருக்கிறது ஒரு மோசடி கும்பல்.

ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்த பிறகு சைபர் க்ரைம் போலீசை நாடி புகார் கொடுத்திருக்கிறார் அந்த தொழிலதிபர். அந்த புகாரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ரியா ஷர்மா என்ற பெண்ணிடம் இருந்து நான் மோர்பியை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு மெசேஜ் செய்திருந்தார். சில நொடிகளில் வீடியோ கால் செய்து பேசினார். அப்போது வீடியோ காலிலேயே உறவு வைத்துக்கலாம் என வற்புறுத்தினார். ஆனால் முதலில் மறுத்த போது இதனால் எந்த பிரச்னையும் வராதுனு சொல்லி சமாதானம் செய்து வீடியோ காலை சில நிமிடங்களுக்கு தொடரச் செய்தார்.

கொஞ்சம் நேரத்திற்கு பிறகு அந்த வீடியோ காலில் நிர்வாணமாக இருந்ததை அனுப்பி 50,000 ரூபாய் கேட்டு மிரட்டினார். அந்த மிரட்டல் 50 ஆயிரத்தோடு நிறுத்தாமல் அடுத்தடுத்து பல கட்டங்களாக தொடர்ந்தது. அதன்படி, கொஞ்சம் நாட்கள் கழித்து டெல்லி இன்ஸ்பெக்டர் பேசுறேன் வீடியோவை காட்டி ரூ.3 லட்சம் கேட்டார். பின்னர் டெல்லி சைபர் க்ரைம்ல இருந்து பேசுறேன். உன் மேல FIR போடக்கூடாதுனா ரூ.80.77 லட்சம் அனுப்புனு கேட்டார். அதைத் தொடர்ந்து உன்கிட்ட வீடியோ காலில் பேசின அந்த ரியா ஷர்மா தற்கொலை முயற்சி பண்ணிருக்காங்க. இந்த விவகாரத்துல சட்டப்படி பிரச்னை ஏதும் வரமா வழக்கை முடிக்கனும்னா 30 லட்சம் ரூபாய் அனுப்புனு CBI ஆஃபிசர் ஒருத்தார் கேட்டார்.

இப்படியாக 2 கோடியே 70 லட்சம் வரை பணத்தை கொடுத்திருக்கிறேன். ஆனால் வீடியோ சம்பந்தப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக சொல்லி நீதிமன்ற ஆணைக்கான நகலை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் இருந்த முத்திரையை பார்த்த பிறகுதான் எல்லாம் மோசடி கும்பலின் வேலை தெரிந்தது. 11 பேர் என்னை தொடர்புகொண்டு டிசம்பர் 27ம் தேதி வரையில் 2.70 கோடி ரூபாயை மிரட்டி பறித்திருக்கிறார்கள்.” என ஏமாற்றப்பட்ட அந்த தொழிலதிபர் சைபர் க்ரைம் போலீசிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து, மிரட்டி பணம் பறித்தல், ஆள்மாறாட்டம், மோசடி செய்தல் என பல பிரிவுகளில் அந்த 11 பேர் மீது வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட தொடங்கியிருக்கிறது சைபர் க்ரைம் போலீஸ்.

இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் மக்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த நபர் எப்படி இப்படியான வலையில் விழுந்து கோடிகளில் பணத்தை இழந்திருப்பார்? என கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபோக, இன்னமும் Nudity என்பதை பலவீனமாகவே கருதிக் கொண்டிருப்பதன் காரணமாகவே இதுபோன்ற மோசடி கும்பல் விரிக்கும் வலைகளில் சிக்கி எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை பல தரப்பினரும் சின்னாபின்னமாகி வருகிறார்கள்.

ஆணாக இருக்கும் இந்த தொழிலதிபருக்கே இப்படிப்பட்ட நிலைமை இருந்தால் அதே இடத்தில் ஒரு பெண் சிக்கியிருந்தால் அவரது கதி என்னவாவது? மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவோ அல்லது உங்களின் நிஜ நிர்வாணமான வீடியோவோ எதுவாக இருந்தாலும் மிரட்டலுக்கு ஆட்படுத்தப்பட்டால் முதல் வேலையாக போலீசை நாடி புகாரை கொடுக்கும் வழக்கத்துக்கு எவருமே வர வேண்டும். நிர்வாண வீடியோவை நெட்டில் விட்டால் சமூகத்தின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும், இதுநாள் வரை பெற்றிருந்த எல்லா நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்ற இந்த பலவீனமான பயமே அந்த மோசடி கும்பலின் ஜீரோ முதலீடு.

ஏமாற்றும் கூட்டத்தின் முதலீட்டுக்கு நீங்கள் தீனி போட வேண்டிய அவசியமே இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். குறிப்பாக இளம் வயதினரை காட்டிலும் இந்த கும்பலின் இலக்குகள் பெரும்பாலும் 40, 50 வயதை கடந்தவர்களையே குறிவைக்கிறது. ஆகையால் எந்த சபலத்திற்குள்ளும் செல்லாமல் முன்பின் தெரியாத எவரும் அவர்களாக ஃபோன் செய்தால் அதனை முற்றிலும் தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனெனில் சில நிமிட ஆசைக்காக இணங்கி பல நிமிடங்கள் வாழ்வதற்கான நிம்மதியை தொலைத்துவிடுவது கிட்டத்தட்ட தற்கொலை செய்துக்கொள்வதற்கு நிகர்.

ஆகவே மோசடிக்காரர்களிடம் ஏமாந்து போனதை பற்றி போலீசிடம் புகார் கொடுத்தால் மானம் போகும், மரியாதை போகும் என்றெல்லாம் எண்ணி அட்சய பாத்திரம் போல ஸ்கேமர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து வந்தால் வாழ்க்கையில் எஞ்சியிருப்பது வெறும் மன உளைச்சலும், மன அழுத்தமும்தான். ஆகையால், விவரம் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ எவராயினும் ஏமாற்றுப்பேர்வழிகளிடம் சிக்கினால் நாட வேண்டிய இடம் காவல் நிலையமாகவே இருக்க வேண்டும். கண் கெட்ட பிறகு சூரியனை தொழுது எந்த பயனும் இல்லை என்பது போல கடைசி நேரத்தில் போலீசை நாடுவதற்கு பதிலாக உங்களை சுற்றி நடக்கும் செயல்கள் தவறாக இருப்பதாக உணர்ந்தால் அந்த செயலுக்கு இணங்காமல் சமயோசிதமாக செயல்படுவதே ஆகச்சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்பதே திண்ணம்.

இதனிடையே, வங்கியில் இருந்து பேசுவதாகச் சொல்லி OTP எண்ணை சொல்லச் சொல்லி பணத்தை பறிக்கும் கும்பல் ஒரு புறம் இருக்க, சமயம் பார்த்து ஆசைக்கு இணங்க வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதால் காவல்துறை தரப்பிலும் இதுபோன்ற மோசடி கும்பலின் கொட்டத்தை அடக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com