வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வாட்ஸ் அப் வதந்தியால் வட மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
குடியாத்தம் அடுத்த பரசுராமன்பட்டியில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்தி நரபலி கொடுப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் வட மாநில இளைஞர் ஒருவரை கட்டை மற்றும் கல்லால் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது கொலை வழக்கு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்புபவர்கள், வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவிட்டு பதட்டத்தை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி.பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.