'என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’.. மாணவியின் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

'என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’.. மாணவியின் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது
'என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’.. மாணவியின் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான விசாரணையில், பதிவாளர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்ததாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை என்னென்ன நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான சில முக்கிய விவரங்கள், இங்கே.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழக முழுநேர பொறுப்பு பதிவாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். மேலும் மூன்று மாணவிகளுக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வறிக்கையை சரி பார்ப்பதற்காக மாணவியை நேரில் வர அறிவுறுத்தியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் மாணவியை வரவழைத்ததாக கூறப்படுகிறது.

அவர் அறிவுறுத்தலின்பேரில் அம்மாணவி, மாலை 5 மணிக்கு தனது உறவினர் ஒருவருடன் பதிவாளர் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது மாணவியுடன் சென்ற உறவினர் வெளியே டீ குடிக்க சென்றதாகவும், அப்போது மாணவி தனியாக இருந்ததை பதிவாளர் கோபி தனக்கு சாதகமாக்கி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பதிவாளரின் செயலால் மாணவி அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து வெளியேறி உள்ளே நடந்தது குறித்து தனது உறவினரிடம் கூறியதாக தெரிகிறது. இதன் பின்னர் இதுதொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். தனது புகாரில், `பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’ என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புகார் குறித்து போலீசார் பல்கலைக்கழகதில் விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளனர். இப்புகாரை `பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்’ வழக்குப்பதிவு செய்த கருப்பூர் போலீஸார், அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்துள்னர். 

இந்நிலையில் ஆராய்ச்சி மாணவி சில அடையாளம் தெரியாத மூன்று நபர்களுடன் தனது வீட்டிற்குள் புகுந்து தன்னை தாக்கியதாக கூறி, பதிவாளர் கோபியும் தெரிவித்திருக்கிறார். சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தான் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்தும் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணை முடிவில் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் இதை மறைக்க தன் தரப்பில் காவல்துறையினரிடம் போலியான புகார் ஒன்றை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெண் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மீது 2016 - 17 ம் ஆண்டு ஏழு ஆராய்ச்சி மாணவிகள் பேராசிரியர் கோபி தவறாக நடக்க முயன்றதாக, அப்போதய துணைவேந்தர் சாமிநாதனிடம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு விசாரணை நடத்தி துணைவேந்தரிடம் விசாரணை அறிக்கையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பெயரளவில் தண்டனையாக `மூன்று ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க தடை’ என்பது விதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com