கடத்திய குழந்தையை 80 ஆயிரத்திற்கு விற்க முயன்றோம்: கைதான பெண்கள் வாக்குமூலம்
சென்னையில் சாலையோர நடைபாதையில் கடத்திய 10 மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கைதான பெண்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எதிராக உள்ள நடைபாதையில் லதா - ஆனந்தன் தம்பதியினரின் 10 மாத ஆண் குழந்தை சனிக்கிழமை நள்ளிரவு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை மீட்க 3 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் குழந்தை அகிலன், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சபியா, வனிதா என்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் குழந்தையை கடத்தி ரூ.80 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய குழந்தை கடத்தல் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.