விருதுநகர்: போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.25 லட்சம் பணம், 100 சவரன் நகைகள் பறிமுதல்
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ. 25 லட்சம் பணம் மற்றும் 100 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அரசு அதிகாரிகள் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருப்பையா தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி அறையில் கணக்கில் வராத ரூ. 25 லட்சம் பணம் மற்றும் 100 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் மோட்டார் வாகன அலுவலக ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சண்முகம் ஆகிய இருவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது