சிறுநீரக சிகிச்சைக்கு சென்றால் உடல் உபாதை: போலி மருத்துவர் கைது
விழுப்புரத்தில் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்து வந்த போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தமிழ் மூலிகை வைத்தியசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். ஆனால் இவர் சித்த மருத்துவமே படிக்கமால் ஆண்டுக்கணக்கில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் வைத்தியம் பார்க்கும் நோயாளிகள் சிலருக்கு உடல் உபாதைகளும், மாற்றுப் பிரச்னைகளும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிறுநீரக கோளாறுக்காக அன்பழகனிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வேறு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், வேறு மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அன்பழகனிடம் விசாரணை நடத்தினர். இதில் அன்பழகன் போலி சித்த மருத்துவர் என தெரியவந்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.