விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கொலை செய்த சிறுவர்கள்... 4 பேர் கைது!
செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர், புதுச்சேரியில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்துவந்தார். இவர் தனது பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் அண்ணன் தனது நண்பர்களான முகமது அமீஸ், அப்துல் சலாமிடம் கூறியுள்ளார். சிவாவை அழைத்து இவர்கள் கண்டித்தபோது, தகராறு ஏற்பட்டு விரோதமாக மாறியது.
அடிக்கடி பிரச்னை ஏற்பட்ட நிலையில், சமாதானம் பேசுவதாக கூறி கடந்த 6 ஆம் தேதி, கூனிமேடு கடற்கரைக்கு இவர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு முகமது அமீஸ், அப்துல் சலாம் மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து மது அருந்திய பிறகு சிவாவை கத்தியால் குத்திக் கொலை செய்து கடலில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர். சிவாவின் உடல் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள புதுகுப்பம் கடற்கரை பகுதியில் 8 ஆம் தேதி கரைஒதுங்கியது.
கணவர் இறப்பு குறித்து விசாரனை செய்ய அவரது மனைவி நஸ்ரின் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அப்துல் சலாம், முகமது அமீஸ் மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து சிவாவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், முகமது அமீஸ், அப்துல் சலாம் ஆகியோரை சிறையிலடைத்து இரண்டு சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.