மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி: வீடியோ இணையத்தில் வெளியானதால் விபரீத முடிவு
உத்தரபிரதேசம் புலாந்த்ஷஹரில் ஒரு சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷஹர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் சிறுமியை பாலியல் தொல்லை செய்து அதை வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றியதாக சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.
திங்களன்று சிறுமியின் உடலை தகனம் செய்துள்ளனர். இந்த நிகழ்வுபற்றி உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்த உடனே சிறுமியின் குடும்பத்தை போலீஸார் தொடர்புகொண்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் 3 பேரையும் விரைவில் கைதுசெய்ய போவதாக புலாந்த்ஷஹர் போலீஸ் அதிகாரி கோபால் சிங் கூறியுள்ளார்.
பட்டியலினத்தவர்களை ஒடுக்கும் சம்பவங்கள் இந்த மாநிலத்தில் ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதைக் குறித்து பாஜக அரசு கவலைப்படுமா? என காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச அரசுக்கு கேள்வி எழுப்பி டிவீட் செய்துள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான நடக்கும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.