’என் அப்பாவை கொன்றுவிட்டார்கள், எப்படி நியாயம் கிடைக்கும்?’ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கண்ணீர்!
‘என் அப்பாவைக் கொன்றுவிட்டார்கள், அப்பாவின் சகோதரரையும் கொல்வார்கள் என்கிற பயம் இருக்கிறது’ என உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏ மீது புகார் கூறிய இளம் பெண் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலருடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு புகார் செய்தார். போலீசார் புகாரை வாங்க தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பே அப்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
அன்றைய தினம் இரவே அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீஸ் நிலையத்தில் அவர் தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்பட்டது. எனவே இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச காவல்துறை ஏடிஜிபி ஆனந்த்குமார் கூறும்போது, சுரேந்திர சிங் மரண விவகாரத்தில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாஜக எம்.எல்.ஏ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்று கூறும்போது, ’என் அப்பாவைக் கொன்றுவிட்டார்கள். எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? முதலில் எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டும். அவர் விசாரணையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலையிடுவார். அதோடு என் அப்பாவின் சகோதரர் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. அவர்கள் அவரையும் கொல்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

