ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை ஆபாசமாக பேசிய பெண்கள் கைது
ஓமலூரை அடுத்துள்ள கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்ற இரண்டு அதிகாரிகளை பெண்கள் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிக்குந்தம், பள்ளிப்பட்டி, பொட்டனேரி, காளிப்பட்டி மற்றும் குட்டப்பட்டி வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு 800 கிலோவாட் மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் உயரமான மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களில் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் இழப்பீடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரின் வீட்டிற்குச் சென்ற போது அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதிகாரிகள் அனுமதியில்லாமல் சாயப்பட்டறை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைகள் கூறினர். அப்போது அந்த வீட்டில் இருந்த மைதிலி, அம்சவேணி ஆகியோர் காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் ஆபாசமானப் பேசி திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் எங்கள் நிலத்திற்கு அத்து மீறி யாரும் வரக்கூடாது என்று கல்லை எடுத்து அடிக்க வந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.
இதைனைத்தொடர்ந்து அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பெண்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.