`ஏலம் விடப்பட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன்’- மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர், தனது சகோதரி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அங்கு ஏலத்தில் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார்.
மேலும் வளர்மதியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுச் சென்றவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வளர்மதி காருக்குடி மக்களை மட்டுமன்றி சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் 200-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பலகோடி ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக வளர்மதி, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இதில் சமந்தப்பட்ட மற்ற 5 நபர்களை தேடி வருகின்றனர்.

