கன்னியாகுமரி: அதிமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டு மணலில் புதைப்பு - இருவர் சரண்

கன்னியாகுமரி: அதிமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டு மணலில் புதைப்பு - இருவர் சரண்
கன்னியாகுமரி: அதிமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டு மணலில் புதைப்பு - இருவர் சரண்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக பிரமுகரின் மகனை கொலைசெய்து சாலையோரம் புதைத்த வழக்கில் தொடர்புடைய இருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக மாவட்ட நிர்வாகியாகவும், குலசேகரம் அருகே அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துவருகிறார். இவரது மகன் லிபின் ராஜா ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி இரவு லிபின் ராஜா கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின் ராஜாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நேசமணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் லிபின் ராஜாவுக்கும் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், நெல்லை - குமரி மாவட்ட எல்லையான பழவூர் பகுதியில் லிபின் ராஜாவின் சடலம் சாலையோரமாக ஓடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் மன்றம் எண் இரண்டில் சரணடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணையில், நண்பர்களான எபின், ஸ்டீபன்ராஜ் மற்றும் லிபின் ராஜாவுக்கும் இடையே ஏற்கெனவே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்ததும் அதனால் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த நான்காம் தேதி இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் லிபின் ராஜாவை அடித்து கொலைசெய்து தங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com