மதுரையில் தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில், பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் 2 மகள்கள் நேற்று காரில் பள்ளிக்குச் செல்லும் போது கடத்தப்பட்டனர். பின்னர் தொலைபேசி உரையாடல்களை கொண்டு போலீஸார் நெருங்கியதை அறிந்த கடத்தல்காரர்கள், அந்த இரண்டு சிறுமிகளையும் அவர்களின் வீட்டின் அருகே இரவில் விடுவித்துச் சென்றனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் காவல்துறையினர் போல் நடித்து 2 சிறுமிகளையும் கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 8 தனிப்படை அமைத்து விசாரித்து வந்த காவல்துறையினர், சிறுமிகள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவரையும், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். அதில் ஜீவஜோதி, தொழிலதிபர் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.