குடும்ப பிரச்சனையில் நடந்த சோகம் - 2 குழந்தைகளின் தாய், 3 குழந்தைகளின் தந்தை விபரீத முடிவு

குடும்ப பிரச்சனையில் நடந்த சோகம் - 2 குழந்தைகளின் தாய், 3 குழந்தைகளின் தந்தை விபரீத முடிவு
குடும்ப பிரச்சனையில் நடந்த சோகம் - 2 குழந்தைகளின் தாய், 3 குழந்தைகளின் தந்தை விபரீத முடிவு

ராஜபாளையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாய், 3 குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்க புரத்தில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் அய்யனார். கூலி தொழிலாளியான இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், கவிதா மற்றும் கல்யாணகுமார் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அய்யனாரின் தந்தை சஞ்சீவிக்கும், ராமலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் மாமனாருக்கும், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு ராமலட்சுமி தெருவுக்கு வந்து உள்ளார். அந்த சமயம் தெருவில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்போது ராமலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ராமலட்சுமி உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் மூர்ச்சை அடைந்த அவர், அருகே இருந்த வீட்டின் வாசலில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கீழராஜ குலராமன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதே போல, ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள பச்சை காலனியைச் சேர்ந்தவர் ராஜன். 40 வயதான இவருக்கு ராமலட்சுமி என்கிற மனைவியும் முனீஸ்வரன், ரவிக்குமார், சரவணன் என்கிற மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். பெயிண்டிங் தொழிலாளியான ராஜனுக்கும், மனைவி ராமலட்சுமிக்கும் இடையே கடந்த சில தினங்களாக தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜன். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆதியூர் கண்மாய் அருகே உள்ள செங்கல் சூளை கிணற்றில், ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் ராஜன் என்பது தெரியவந்தது.

சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜனின் சடலத்தின் அருகே அவரது உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com