திருவள்ளூர்: வடமாநில வியாபாரிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவ சதாம் மற்றும் லூசுமா என்ற இருவர், திருவள்ளூர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் குறைந்த விலையில் டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அப்படி ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் பகுதியில் விற்பனைக்காக இவர்கள் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் டிவி வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து, அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு டிவி மற்றும் ஹோம் தியேட்டர் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வடமாநில இளைஞர்கள் அளித்த புகாரின்பேரில், இருசக்கர வாகன எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் துரிதமாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து டிவி மற்றும் ஹோம் தியேட்டரையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான இருவரும் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியபாளையம் காவல் துறையினர், வழிப்பறி செய்யப்பட்ட டிவி மற்றும் ஹோம் தியேட்டரை மீட்டு வடமாநில இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.