மெரினாவில் இளம்பெண் கொலை: ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது
சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தின் பின்புறம் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது, அந்தப் பெண் ஆடைகள் களைந்து பிணமாக கிடந்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் கொலை செய்யப்பட்ட இரவு 11 மணியளவில் 4 ஆட்டோ டிரைவர்களுடன் மெரினா கடற்கரையில் சுற்றியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் அப்பெண்ணை கொலை செய்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் மாட்டாங்குப்பத்தை சேர்ந்த பிரேம் என்பதும், மற்றொருவர் வண்ணாரபேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கும்போது, அவர்கள் பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த காயத்தை வைத்து பார்க்கும்போது அவள் கழுத்து நெறிபட்டு மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இதுவரை பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கை வரவில்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.