திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு: திருச்சி சமயபுரத்தில் இருவர் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திருச்சி சமயபுரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவர் 188-வது வட்ட திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் செல்வம். இவரது மனைவி சமினா. 188-வது வார்டு திமுக வேட்பாளராக சமினா போட்டியிடுவதற்கு தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, கிறிஸ்தவ பாதிரியார் டேனியல் என்பவரை பார்ப்பதற்காக மடிப்பாக்கம் சதாசிவம் நகர்- ராஜாஜி நகர் பிரதான சாலை வழியாக சென்றிருக்கிறார்.
அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் செல்வத்தை பைக்கில் வழிமறித்து தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் செல்வத்தை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்துவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் திமுக வட்ட செயலாளர் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இக்கொலைக்கு தொடர்புடைய ராதாகிருஷ்ணன், தனசீலன் எனும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு காரணமாக இருந்த அவர்கள், சென்னையிலிருந்து தப்பிச்சென்றபோது சமயபுரம் சுங்கச்சாவடியில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். செல்வம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.