சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி... இருவர் கைது!
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை சோழிங்கநல்லூர், ஏரிக்கரை உமா மகேஸ்வரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவர் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரின் தலையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்த செல்போன், வெள்ளிப் பொருட்கள் ரூ.1500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (எ) செல்வா (21), தமிழரசன் (எ) சூர்யா (24) ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து கத்தி, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.