பேருந்தில் செல்லும் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பேருந்தில் செல்லும் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
பேருந்தில் செல்லும் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் செல்போனை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று பணி முடித்து வீட்டிற்கு மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது, அருகிலிருந்த நபர் மணிகண்டனின் செல்போனை திருடிக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட முயன்றுள்ளார். உடனே மணிகண்டன் சத்தம் போட்டுக்கொண்டே அவரை துரத்தியபோது, செல்போனை திருடிய நபர் அருகிலிருந்த ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றார்.

இந்நிலையில், அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் ரோந்து வாகன காவல் குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த ஆட்டோவை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து ஆட்டோவிலிருந்த 2 நபர்களை பிடித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்போன் திருடி பிடிபட்ட நபர்கள் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (21) மற்றும் அமீனுல்லா (41) என்பதும் தெரியவந்தது. மேலும், ஆட்டோவில் சென்று நோட்டமிடும் மணிமண்டன், பேருந்தில் செல்லும் பயணிகளிடம் செல்போன்களை பறித்துக் கொண்டு பின்னர் பேருந்தை பின் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிவரும் அமீனுல்லாவுடன் ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வதும் தெரியவந்தது.

அதேபோல் மணிகண்டன் (எ) பாட்டில் மணி மீது ஏற்கனவே 7 திருட்டு வழக்குகளும், அமீனுல்லா மீது ஒரு அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதனடிப்படையில் பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து மணிகண்டனின் செல்போன் உட்பட 5 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com