போலி பத்திரம் தயாரித்து மோசடி: நிலத்தை விற்க முயன்ற இருவர் கைது
போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்ய முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வெள்ளேரித் தாங்கல் வரதராஜன் நகரில் சுமார் 7740 சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயார் செய்த இருவர் மோசடியாக 21,13,000 மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் (56), என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று இடத்தை பதிவு செய்ய முயன்ற போது, இடத்தின் உரிமையாளர் ஏற்கெனவே அந்த இடத்தை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என தடை மனு கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதனால் சுதாரித்துக் கொண்ட பதிவாளர் கையொப்பத்தை ஒப்பிட்டு பார்த்து விட்டு இது போலி என தெரிந்து கொண்டு போலி பத்திரம் தயார் செய்த இருவரையும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பெசன்ட் நகரைச் சேர்ந்த அற்புதராஜ் (44), பாலவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹக் (49), ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், உரிமையாளர்கள் இங்கு இல்லாத இடமாக தேர்வு செய்து, அந்த இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.