ராமநாதபுரம்: இரண்டரை மாதக்குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை அலட்சியமே காரணம் எனப் புகார்

ராமநாதபுரம்: இரண்டரை மாதக்குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை அலட்சியமே காரணம் எனப் புகார்
ராமநாதபுரம்: இரண்டரை மாதக்குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை அலட்சியமே காரணம் எனப் புகார்

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டரை மாத குழந்தை உயிரிழந்தது. மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது ராஜா. பெயிண்டர் தொழில் செய்யும் இவருக்கு கஸ்தூரி என்பவருடன் திருமணமாகி இரண்டரை மாத குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். குழந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தும் அவசர சிகிச்சை பகுதிக்கு அனுப்பி வைக்காமல் அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்ததால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கமுடியாமல் போனதாகவும், அதனால்தான் தனது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆக்சிஜன் பொருத்தப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அலட்சியப்போக்காக இவர்களை வெகுநேரமாக மருத்துவமனை வெளியேயே நிறுத்தி வைத்திருந்ததாகவும், சிகிச்சை அளிக்கும் உரிய இடம் தெரியாததால் மருத்துவமனை வளாகப்பகுதிகளில் வெகு நேரமாக சுற்றி வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதனால் உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க முடியவில்லை. மேலும்  அங்குள்ள ஊழியர்கள் ஆக்சிஜனை எடுத்துவிட்டதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இதனால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகை வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com