காஞ்சிபுரம்: இளம்பெண் மரண வழக்கில் திருப்பம்; தந்தையே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்! 

காஞ்சிபுரம்: இளம்பெண் மரண வழக்கில் திருப்பம்; தந்தையே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்! 

காஞ்சிபுரம்: இளம்பெண் மரண வழக்கில் திருப்பம்; தந்தையே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்! 
Published on

உத்திரமேரூரில் தனது மகள் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக பெற்றோர் கூறி வந்த நிலையில், தந்தையே மகளை கழுத்தை நெரித்துக் கொன்றது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி, தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இவர்களுடைய மகள் 23 வயதான செந்தாரகைக்கும், யுவராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. செந்தாரகை திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்னர் தனது தாய்வீட்டுக்கு வந்தார். அங்கு குளியலறைக்கு சென்ற செந்தாரகை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும் கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் அவருடைய பெற்றோர் கூறினர். இதையடுத்து செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய அவரது தந்தை பாலாஜி ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

ஆனால் செந்தாரகை சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செந்தாரகையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செந்தாரகையின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் செந்தாரகை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொலை வழக்காக உத்திரமேரூர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து செந்தாரகையின்  கழுத்தை பாலாஜி நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com