காதலியின் ஆபாச படங்களை அவரது தந்தைக்கே அனுப்பி மிரட்டிய காதலன் கைது
திருமணம் செய்து வைக்கக்கோரி காதலித்தப் பெண்ணின் ஆபாசப்படத்தை, பெண்ணின் தந்தைக்கு அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கோவை புதூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அவரவர் சொந்த ஊருகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனிடையே பெண்ணின் தந்தைக்கும் தேவேஷ்வர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் இளைஞரை காதலிக்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேவேஸ்வர் காதலித்த போது இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த ஆபாச படம் உள்ளிட்டவற்றை, பெண்ணின் தந்தையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி திருமணம் செய்து வைக்கக்கோரி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து இது குறித்து பெண்ணின் தந்தை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடியில் இருந்த தேவேஷ்வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.