கோயிலை நிர்வகிப்பதில் தகராறு - இளைஞர் கொலை ; இருவருக்கு கத்தி குத்து

கோயிலை நிர்வகிப்பதில் தகராறு - இளைஞர் கொலை ; இருவருக்கு கத்தி குத்து
கோயிலை நிர்வகிப்பதில் தகராறு - இளைஞர் கொலை ; இருவருக்கு கத்தி குத்து

தூத்துக்குடியில் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள மாதா நகரைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (வயது 20). இவர் கட்டட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற பொன்பாண்டி ரவி (37). இவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டாஸ்மாக் பார் கடை நடத்தி வருகிறார். அத்துடன் 12வது வார்டு திமுக கிளைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றை நிர்வகிப்பது தொடர்பாக செல்வத்திற்கும் - ரவி தரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இது பகையாக மாறி இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ரவி தரப்பினர், செல்வம் தரப்பினரை கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் செல்வம் மற்றும் அவரின் நண்பர்களான முத்துக்குமார், முத்துசெல்வம் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்ததுள்ளது. ரவி தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் செல்வத்தின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சமாதானப்படுத்தினர். இந்த சூழலில் ரவி, பார்த்தசாரதி, இசக்கிமுத்து, கனகு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com