முன்னாள் அமைச்சர் பெயரை பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி: கைக்குழந்தையுடன் புகாரளித்த பெண்
செவிலியர் பணிக்கு முயன்ற பெண் ஒருவரிடம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடன் பெயரின்கீழ் அதிமுக-வினர் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் இன்றைய தினம் திருச்சியில் ஐ.ஜி. அலுவலகத்துக்கு கைக்குழந்தையுடன் வந்து இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தனது புகாரில் அவர் ‘முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசி வேலை வாங்கி தருவதாகக் கூறி அதிமுகவினர் மூன்று பேர் என்னிடம் ரூ. 4 லட்சம் லஞ்சம் பெற்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர்கள், ஜெனிபர் மற்றும் பிரசாத் தம்பதியினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சேர்ந்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்த லாசர், சூரியூரை சேர்ந்த சுப்பிரமணியன், தேனீர்பட்டியை சேர்ந்த வீரமணி ஆகியோர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மூலமாக செவிலியர் பணி வாங்கி தருவதாக ஜெனிபரிடம் கூறியுள்ளனர். இதன்பேரில் அவர்கள் சுமார் 4 லட்சம் ரூபாயை கடந்த 25.10.2020 லஞ்சமாக பெற்றுள்ளனர் என கூறப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து செவிலியர் பணியும் ஜெனிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மாதம் ஆன பிறகு தற்காலிக பணியாளர் என்கிற பெயரில் அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். ஜெனிபருக்கு நிரந்திர பணி வழங்கப்படாததால் லாசர் உள்ளிட்ட மூன்று பேரிடம் அவர் தொடர்ந்து இது குறித்து கேட்டு வந்துள்ளார். அவர்களும் கண்டிப்பாக வேலை உண்டு என்றும், அதற்கான அரசு உத்தரவு கையில் உள்ளது என்று கூறி அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் (22.10.2021) புகார் அளித்துள்ளார் அவர். அதன்படி லாசர் என்பவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், மீதமுள்ள இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கைக்குழந்தையுடன் ஐ.ஜி அலுவலகத்தில் ஜெனிஃபர் புகார் மனு அளித்திருக்கிறார்.