திருச்சி: போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ஜேம்ஸை பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையும், விடுதி வார்டனும், தலைமைஆசிரியர் ஜேம்ஸின் மனைவியுமான ஸ்டெல்லா மேரி, குற்றத்தை மூடி மறைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகரில் புத்தூர் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவிபெறும் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ் என்பவர், இங்குள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவ, மாணவியர் தங்கிப்படிப்பதற்கான இருபாலர் மாணவர் விடுதி அரசின் அனுமதி இல்லாமல் இயங்கிவந்தது. இந்த விடுதியின் வார்டனாகவும், பள்ளி ஆசிரியராகவும், ஜேம்ஸின் மனைவி பணியாற்றி வருகிறார்.
இதில் தங்கி படித்துவந்த மாணவ, மாணவிகளில், 8 ஆம் வகுப்பு படித்துவந்த ஒரு மாணவி மட்டும், தீபாவளி விடுமுறைக்கு குடும்பச்சூழல் காரணமாக வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கிவிட்டார். இந்த மாணவி சிறுவயதில் இருக்கும்போதே, தாயார் பிரிந்து சென்றுவிட்டார். தந்தையுடன் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், மாணவியின் தந்தையும் சமீபத்தில் காலமானார். இதனால் வேறு வழியில்லாமல், அந்த மாணவி விடுதியிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் தனியாக தங்கியிருந்த அந்த மாணவியிடம், ஜேம்ஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் ஜேம்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணைக்கு பின்பு, ஜேம்ஸ்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினரும், கல்வித்துறை அதிகாரிகளும், மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில் விசாரணை நடத்தினர். அதே பள்ளியில் ஆசிரியையாகவும், விடுதி வார்டனாகவும் இருந்துக்கொண்டு குற்றத்தை மூடி மறைத்ததாக ஜேம்ஸ் மனைவி ஸ்டெல்லா மேரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் என்ற தலைமைஆசிரியரையும்,குற்றத்தை மூடி மறைத்த அவரது மனைவி ஆசிரியை ஸ்டெல்லா மேரியும் பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

