திருச்சி: இறந்த ஆட்டை விலைக்கு வாங்கியதால் வாக்குவாதம் - தம்பியை கொலை செய்த அண்ணன்
முசிறி அருகே இறந்து போன ஆட்டை விலைக்கு வாங்கி வந்தததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் தம்பியை அண்ணனே குத்தி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைமறைவான அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமராவதி சாலை கிராமத்தில் வசிப்பவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளைய மகன் லாரி டிரைவர் ரவிக்குமார் (32). இவர், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் தனது மனைவி நந்தினியுடன் வசித்து வந்தார். இரண்டாவது மகன் சிவகுமார் தந்தையுடன் அமராவதி சாலை கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் ராஜசேகரன் என்பவரும் அதே ஊரில் வசித்து வந்தார். இந்நிலையில் தந்தை செல்லையாவிற்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்ப்பதற்காக ரவிக்குமார் அமராவதி சாலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதே கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவருக்கு சொந்தமான ஆடு இறந்துள்ளது. இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் என கூறி அண்ணனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூத்த மகன் ராஜசேகரன ரவிக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் கார் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் தா.பேட்டை போலீசார் ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து ரவிக்குமாரை குத்திக் கொன்ற அண்ணன் சிவகுமாரையும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு அண்ணன் ராஜசேகரனையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.