திருச்சி: ஏடிஎம் கார்டு தகவல்களை ஏமாற்றி பெற்று முதியவரிடம் 17 லட்சம் நூதனமாக திருட்டு

திருச்சி: ஏடிஎம் கார்டு தகவல்களை ஏமாற்றி பெற்று முதியவரிடம் 17 லட்சம் நூதனமாக திருட்டு
திருச்சி: ஏடிஎம் கார்டு தகவல்களை ஏமாற்றி பெற்று முதியவரிடம் 17 லட்சம் நூதனமாக திருட்டு

திருச்சியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வங்கிக் கணக்கில் இருந்து 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திருச்சி பீமநகர் கண்டித்தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (82). இவரது மனைவி விமலாவுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வங்கியில் 1990 ஆம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கி தற்போது வரை 32 ஆண்டுகளாக இவர் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். இவரது சேமிப்பு மற்றும் பென்சன் பணம் என 17 லட்சத்து 42 ஆயிரத்து 239 ரூபாய் இருந்துள்ளது.

கடந்த 3ம் தேதி மனைவியுடன் வீட்டில் இருந்தபோது இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது ஏடிஎம் கார்டு காலாவதி ஆகி விட்டதால் அதனை புதுப்பிக்குமாறும் முதியவரிடம் கூறியுள்ளார். வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் ராமகிருஷ்ணன் பயத்தால் அந்த நபர் கேட்ட ஏடிஎம் கார்டு நம்பரை கூறியுள்ளார். பின்னர் உங்களுடைய செல்போனுக்கு ஓடிபி எண் வரும். அதைக் கூறுங்கள் என தெரிவித்ததையடுத்து ராமகிருஷ்ணன் இவருடைய கைபேசிக்கு வந்த ஓடிபி (OTP) எண்ணையும் தெரிவித்துள்ளார். உங்களது ஓடிபி எண் தவறாக உள்ளது மீண்டும் கூறுங்கள் என மூன்று முறை OTP எண்ணைப் பெற்றவுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் அந்த மர்ம நபர் இவரது வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். இதற்கான குறுஞ்செய்தி ராமகிருஷ்ணன் கைபேசிக்கு வந்ததும் பதறிப்போய்  உடனடியாக பேரன் கிருபாகரனுக்கு தொலைபேசி மூலம்  கூறியதையடுத்து அவர் உடனடியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை இ-மெயிலுக்கு தனது தாத்தா ராமகிருஷ்ணன் வங்கிக் கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக புகார் செய்தி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து ராமகிருஷ்ணனின் தொலைபேசிக்கு பணம் எடுப்பதற்கான எந்த குறுஞ்செய்தியும் வராததால் நிம்மதியாக இருந்தார். கடந்த 8ம் தேதி பாலக்கரையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளரை சந்தித்து தனது வங்கிக் கணக்கில் 259 ரூபாய் மட்டுமே இருப்பதாக மேலாளர் மூலம் அறிந்த ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இவரது வங்கி கணக்கின் பண பரிவர்த்தனை பட்டியலை பார்த்தபோது 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் என 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com