தொடரும் அதிர்ச்சி - சென்னையில் விசாரணை கைதி சந்தேக மரணம்

தொடரும் அதிர்ச்சி - சென்னையில் விசாரணை கைதி சந்தேக மரணம்
தொடரும் அதிர்ச்சி - சென்னையில் விசாரணை கைதி சந்தேக மரணம்
சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவுக்கு இன்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.  இதையடுத்து ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக மரணமடைந்துள்ள ராஜசேகர் திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, முந்திரி தோப்பு, பேட்டைகாரபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி.
விசாரணைக்காக ராஜசேகரை கொடுங்கையூர் போலீசார் நேற்றே அழைத்து வந்து லாட்ஜ் ஒன்றில் வைத்து விசாரணை நடத்தியதாகவும், அதன்பிறகே கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்ததாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ள முயன்றபோது இணைப்பை துண்டித்து விட்டனர்.
விசாரணை கைதி சந்தேக மரணத்தைத் தொடர்ந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் யார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தியது? எப்போது அழைத்து வரப்பட்டார்? எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு ஏப்ரல் 26ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கொலை வழக்குப்பிரிவு, எஸ்சி,எஸ்டி சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விக்னேஷ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com