தி.மலை | வெளிநாட்டு பெண் பக்தரை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி - மலை மீது நடந்த கொடுமை
செய்தியாளர்: மா.மகேஷ்
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் மட்டுமின்றி யோகிராம் சுரத்குமார் ஆசிரமம், ரமணரிசி ஆசிரமம், சேஷாத்திரி ஆசிரமம் உள்ளிட்ட எண்ணற்ற ஆசிரமங்கள் கிரிவலப் பாதை முழுவதும் அமைந்துள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் நீண்ட நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி தியானம் உள்ளிட்ட ஆன்மிக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் பக்தர் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்து தனியார் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக பணிகள் மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பக்தர், சுற்றுலா வழிகாட்டி சிலருடன் அண்ணாமலையார் தீபமலை மீதுள்ள கந்தாஸ்ரமம் அருகே சென்று தியானம் செய்யச் சொல்லி உள்ளனர்.
ஆனால், சிறிது நேரத்தில் ஆன்மிக வழிகாட்டி வெங்கடேசன் என்பவர் வெளிநாட்டு பெண்ணை முக்தி கிடைக்கும் எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பக்தர் செய்வதறியாது கந்தாஸ்ரமத்தில் இருந்து கீழே இறங்கி தப்பித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவண்ணாமலை பேகோபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் என்பவர் வெளிநாட்டு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார், அடையாள அணிவகுப்பு நடத்தி குற்வாளியை உறுதி செய்தளர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.