6 காவலர்களை பணியிடமாற்றம் செய்து ஐஜி உத்தரவு - ஏடிஎம் கொள்ளை வழக்கின் முழு விவரம்

6 காவலர்களை பணியிடமாற்றம் செய்து ஐஜி உத்தரவு - ஏடிஎம் கொள்ளை வழக்கின் முழு விவரம்
6 காவலர்களை பணியிடமாற்றம் செய்து ஐஜி உத்தரவு - ஏடிஎம் கொள்ளை வழக்கின் முழு விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் நான்கு இடங்களில் ஏடிஎம்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் 6 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் தேதி ஒரே இரவில் நான்கு இடங்களில் ஏடிஎம்களை உடைத்து 75 லட்ச ரூபாய் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் முதலாவதாக திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் பத்தாவது தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் உள்ளது இதிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி ஏடிஎம்மை உடைத்து அதிலிருந்து 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதே போல திருவண்ணாமலை பெரியார் அரசு பேருந்து பணிமனை அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மூன்றாவதாக போளூரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். நான்காவதாக கலசபாக்கத்தில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மை உடைத்து 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இந்த நான்கு இடங்களிலும் ஒரே மாதிரியான கொள்ளைதான் நடந்துள்ளது. அனைத்திலும் கேஸ் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி முதலில் பூட்டப்பட்ட பூட்டுகளை உடைத்து, அடுத்ததாக உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை கேஸ் வெல்டிங் மூலம் சேதப்படுத்தி திறந்து அதில் இருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். ஒரே இரவில் நான்கு இடங்களில் 75 லட்சத்தை கொள்ளையடித்தது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது.

காவல்துறையினரும் அருகில் இருந்த சிசிடிவிகளில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் யார் என்று குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஏடிஎம்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் உள்ள ஒரு சர்வரில்தான் பதிவாகுமாம். அதை போலீசார் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து அதன் அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இவ்வழியாக செல்லும் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனம் மட்டுமின்றி அனைத்து வாகனங்களையும், இருசக்கர வாகனம், லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடங்களில் மற்றும் ஏடிஎம் இருக்கும் இடத்தையும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சுருதி ஆகிய ஐந்து பேரும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நான்கு ஏடிஎம்களின் சிசிடிவி காட்சிகள் மும்பையில் இருந்து வாங்கப்பட்டது அவை பரிசீலனையில் உள்ளது. நான்கு ஏடிஎம் மிஷின்களும் கேஸ் வெல்டிங் மிஷின் கட் செய்யப்பட்டதால் அவை தீப்பிடித்திருக்கக்கூடும். டெக்னிக் தெரிந்த வெளிமாநில கொள்ளையர்களால் தான் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, அசாம் போன்ற மாநிலங்களில் இதுபோல் நடந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுதான் முதல்முறை. இதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தவிர வெளிமாநிலங்களில் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தான் சென்னையில் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது. Scientific evidence இந்த கொள்ளை வழக்கில் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

சென்னையில் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலும் திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்து கும்பலும் ஒரே இடத்தில் இருந்து ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தான். ஆனால் வெவ்வேறு ஆட்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடந்த கொள்ளைகளையும் ஒரே ஒரு கும்பல் தான் செய்துள்ளது இவைகள் மொத்தம இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நான்கு ஏடிஎம்களை உடைத்து கொள்ளை நடைபெற்றது 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது சம்பவத்தின் போது சரிவர பணிகளை ரோந்து பணிகளை செய்யவில்லை என்று காரணம் கூறி திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆறு காவல்துறையினரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி ஐஜி கண்ணன் உத்தரவிட்டார்,

திருவண்ணாமலை காவல் நிலையத்த்தைச் சேர்ந்த மோகன், உதவி ஆய்வாளர் வரதராஜன், போளூர் காவல் நிலையத்தின் தட்சிணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுதாகர், அருண், கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ பலராமன் உட்பட ஆறு பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com