திருவள்ளூர்: திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக பெண் புகார் - திமுக பிரமுகர் கைது
திருவள்ளூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 5 வருடமாக காதலித்து ஏமாற்றியதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் நிவேதா (23). நிவேதாவும் எதிர்வீட்டைச் சேர்ந்த மணி என்பவரது மகன் முருகனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பூண்டி திமுக ஒன்றிய தொண்டர் அணி அமைப்பளராக உள்ள முருகன், நிவேதாவின் தாய் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நிவேதா உடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிவேதாவை திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்த முருகனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நிவேதா முருகனிடம் கேட்டபோது வீட்டில் பெற்றோர் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 7 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகை விநியோகிப்பது நிவேதாவுக்கு தெரியவந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிவேதா நேற்று தனது தாய் தந்தையுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து இன்று திருத்தணி காவல் நிலையத்திற்கு வந்த முருகனிடம் மேற்கொண்ட விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.